மாவட்ட செய்திகள்

உயர் மின்பாதை அமைக்கும் பணி: விளைநிலங்கள் பாதிக்காமல் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்

உயர் மின்பாதை அமைக்கும் பணியின் போது விளை நிலங்கள் பாதிக்காமல் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டார்.

தினத்தந்தி

கோவை,

சத்தீஷ்கர் மாநிலம் ராய்கரில் இருந்து திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே புகழூர் வரையும், புகழூரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் வடக்கு பகுதி மற்றும் திருச்சூர் வரை உயர்மின் பாதை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ரூபாய் ஆயிரத்து 473 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்துவதன் மூலம் வருங்காலங்களில் தென் மாநிலங்களில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. புகழூரில் இருந்து திருச்சூர் வரை மொத்தம் 153 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மின் பாதை அமைக்கப்படுகிறது. இதில் 26 கிலோ மீட்டருக்கு தரைவழியாக பாதை அமைக்கப்படுகிறது. சூலூர், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் விளை நிலங்கள் வழியாக அமைக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மின் பாதை அமைத்தால் 11.65 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும். இதனால் 800 தென்னை மரங்கள் வரை வெட்டப்படும் நிலை உள்ளது. தற்போது மழை இல்லாததால் ஆழ்துளை கிணறுகளை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் உயர் மின்பாதையை அமைக்கும் அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், உயர்மின்பாதை விளைநிலங்கள் வழியாக சென்றால், எதிர்காலத்தில் விவசாயமே செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும், தென்னை மரங்கள் வெட்டப்பட்டால் மீண்டும் மின்பாதை பகுதியில் தென்னை மரங்கள் வளர்க்க முடியாமல் நிரந்தர தடை ஏற்படும் என்றும் வற்புறுத்தினார்கள்.

இரு தரப்பினரிடம் ஆலோசனை நடத்திய கலெக்டர் ஹரிகரன், உயர் மின்பாதை அமைக்க விவசாயம் இல்லாத வறண்ட நிலப்பகுதி அல்லது சாலை ஓரப்பகுதி வழியாக மின்பாதை அமைக்க இடங்களை தேர்வு செய்யலாம். சாலை ஓரத்தில் பூமிக்கு அடியில் மின்கம்பிகளை பதித்து கொண்டு செல்லலாம். விவசாய விளை நிலங்கள் பாதிக்காமல் மாற்றுப்பாதையில் பணிகள் நடைபெற வேண்டும். இதற்காக புதிதாக ஆய்வுப்பணிகளை செய்ய வேண்டும் என்று மின்பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கு அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து சென்றனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்