மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

சூளகிரி சுற்று வட்டாரத்தில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்களுடன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவனிடம், கிருஷ்ணகிரி மேற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், தளி எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், மேற்கு மாவட்ட துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.வுமான பி.முருகன் ஆகியோர் கிராம மக்களுடன் வந்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி ஒன்றியம் சானமாவு வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் போடூர்பள்ளம் என்ற இடத்தில் முகாமிட்டு, சுமார் 60 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதம் செய்து வருகிறது. அத்துடன் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 22-ந் தேதி போடூர்பள்ளத்தில் மாது என்ற விவசாயி யானை தாக்கியதில் உயிரிழந்தார். எனவே, அந்த பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா காட்டுப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். எனவே, இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்றிட வேண்டும்.

மேலும், தர்மபுரியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஓசூர் வரை புதிதாக 6 வழிச்சாலை அமைப்பதற்கான ஆயத்தபணி நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக அமைக்கப்படும் 6 வழிச்சாலையானது ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்யாமல் புதிய வழித்தடத்தில் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.

குறிப்பாக ராயக்கோட்டை பகுதியில் தக்காளி, பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, முள்ளங்கி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறி சாகுபடி செய்யும் பகுதியில் இந்த சாலை அமைக்கப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாவார்கள். அந்த பகுதியில் ஏற்கனவே ரூ. 12 கோடி 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கு ஓர் ஆண்டு ஆகியும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு விடாமல் உள்ள நிலையில், தற்போது அமைக்கப்பட உள்ள 6 வழிச்சாலையானது, அந்த குளிர்பதன கிடங்கும் முற்றிலும் அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல், இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை தவிர்க்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தர்மபுரி - ஓசூர் சாலையை விரிவாக்கம் செய்திட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்