ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆங்காங்கே சாலைமறியல் நடந்தது. தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டும் பருவமழை ஏமாற்றிவிட்டது. இதனால் இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் விசாலாட்சி உத்தரவின்பேரில், நகராட்சி பொறியாளர் கோபு தலைமையில், சுகாதார ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் 18 வார்டுகளிலும் வீதி, வீதியாக சென்று பொதுமக்கள் யாராவது குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி நீரை உறிஞ்சுகிறார்களா? என திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
40 மின்மோட்டார்கள் பறிமுதல்
அதில் 40 வீடுகளில் குடிநீரை உறிஞ்சுவதற்காக பயன்படுத்திய மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் விசாலாட்சி நிருபர்களிடம் கூறுகையில், ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் மின்மோட்டார் பறிமுதல் செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும் என்றார்.