ஏற்காடு,
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இங்கு பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, படகு இல்லம், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காட்டுக்கு வந்து செல்வார்கள். படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைவார்கள்.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் நேற்று எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக தெரிந்தது.
படகு இல்லத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டத்துக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் சுற்றிப்பார்த்தனர். கடும் குளிரும் இருந்தது. இதனால் சாலையோரங்களில் உள்ள கடைகளில் சொட்டர் விற்பனை மும்முரமாக இருந்தது. கடைகளிலும் சுற்றுலா பயணிகள் மிளகாய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
ஏற்காடு தட்பவெப்ப நிலை தற்போது நன்றாக உள்ளது. சுற்றிப்பார்க்க அருமையாக இருந்தது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை சீர் செய்ய வேண்டும். இங்குள்ள இடங்களை சுற்றிப்பார்த்தோம். நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.