உத்தமபாளையம்:
லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கூடலூர் அருகே லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் வண்ணாந்துறை என்னுமிடத்தில் தடுப்பணை கட்டி ராட்சத குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வருகிற 9-ந்தேதி பூமிபூஜை நடத்த முன்னேற்பாடு பணிகள் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள், சலவைத்தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வம், மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள், சலவைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பேசுகையில், மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தை கைவிட்டுவிட்டு, வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லலாம். ராட்சத குழாயில் குடிநீர் கொண்டு செல்வதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் சலவைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று வலியுறுத்தினர். அப்போது அதிகாரிகள், விவசாயிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதில் கலைந்து சென்றனர்.