நாகப்பட்டினம்,
2019-20-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற் கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் (http://www.ksb.gov.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். நடப்பாண்டில் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு, முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.3 ஆயிரம் மற்றும் ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது.
இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு தேவைப்படும் படைப்பணி சான்று சுருக்கம் பெற முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் குழந்தைகளின் கல்விச்சான்றுடன் நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதியாகும். எனவே நாகை மாவட்டத்தினை சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.