காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ராணுவத்தின் 44 ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படை முகாமில் பணியாற்றி வந்தவர் அவுரங்கசீப். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த வாகனத்தில் சென்றார்.
அப்போது பயங்கரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி சமீர் டைகரை கொன்ற அதிகாரிகள் குழுவில் அவுரங்கசீப்பும் இடம் பெற்றிருந்ததால், பழி வாங்கும் நடவடிக்கையாக பயங்கரவாதிகள் கொன்றிருக்க கூடும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், அவுரங்கசீப் கொல்லப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக சக பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ராணுவத்தின் 44 ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படை முகாமை சேர்ந்த மூன்று வீரர்களும் அவுரங்கசீப் செல்லும் இடம் பற்றி தகவல் கூறியிருக்கலாம் எனவும், அவர்களை தடுப்பு காவலில் எடுத்து பாதுகாப்பு படை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.