சித்ரகூட்,
உத்தர பிரதேசத்தில் சித்ரகூட் நகரில் பஹில்பூர்வா காவல் நிலையத்துக்கு உட்பட்ட மதா என்ற பகுதியில் சிறப்பு அதிரடி படை போலீசார் இன்று காலை 3.30 மணியளவில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில், கவுரி யாதவ் என்ற பிரபல கொள்ளைக்காரனுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இரு தரப்பினரும் அடுத்தடுத்து துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.
இந்த என்கவுண்ட்டரில் கவுரியை போலீசார் சுட்டு கொன்றனர். கவுரியை பற்றிய தகவல் அளிப்போருக்கு அல்லது பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்து உள்ளது. இதேபோன்று மத்திய பிரதேச அரசு ரூ.50 ஆயிரம் அறிவித்திருந்தது.
இதன் பின்னர், ஏ.கே.-47 ரக துப்பாக்கி ஒன்று, நூற்றுக்கணக்கான வெடித்த மற்றும் வெடிக்காத தோட்டாக்கள், உள்நாட்டு தயாரிப்பிலான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.