ஜோத்பூர்,
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு (77). இவரது ஆசிரமத்தில் தங்கி படித்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதேபோல் பல்வேறு பலாத்கார வழக்குகள் இவர் மீது குவிந்தன. இதையடுத்து, ஆசாராம் பாபுவை கடந்த 31-8-2013 அன்று போலீசார் கைது செய்து பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ஜோத்பூர் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவருக்கு எதிரான வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்த நிலையில், அண்மையில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆசராம் பாபு குற்றவாளி என அறிவித்தது. ஆசராம் பாபுவுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்தும் ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசராம் பாபு, ஜோத்பூரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஆதரவாளர்களுக்காக ஆசாராம் பாபு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆசராம் பாபு பேசிய அந்த ஆடியோவில், தீர்ப்பு வழங்கும்போது, யாரும் சிறையின் முன்பு கூடாமல், அமைதி காத்தமைக்கு நன்றி. சட்டம் ஒழுங்கை மதித்து நடப்பது மிகவும் அவசியம். இதை நானும் பின்பற்றுகிறேன். சிலர் ஆசிரமத்துக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆசிரமத்தையும் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்ற செய்தி வந்தது.
அப்படி ஏதும் செய்யாதீர்கள். அவ்வாறு ஆசிரமத்தில் இருந்து யாருக்கும் எந்தவிதமான கடிதமும் வழங்கவில்லை; அனுமதிக்கவில்லை.சிறையில் உள்ள என்னுடைய உதவியாளர்கள் சில்பி, சாரத் சந்தா ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் இருவரையும் வெளியில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். சிறந்த வழக்கறிஞர்களை நியமித்து, உயர்நீதிமன்றத்தில் வாதிடவையுங்கள். முதலில் அவர்கள் இருவரும் வெளியேவந்தபின் எனக்காக வாதிடட்டும். பொய்களுக்குக் கால்கள் கிடையாது. அது நிலைத்து நிற்கமுடியாது. நமக்கு நல்ல காலம் விரைவில் வரும் பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்து உள்ளார்.
சிறையில் தண்டனைக் கைதிகளாக இருப்பவர்கள் மாதத்துக்கு 80 நிமிடங்கள் இரு தொலைப்பேசி எண்களுக்கு அழைப்புச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, நேற்று சாமியார் ஆசாராம் பாபு 15 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆடியோவில் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார். அதைப் பதிவு செய்து வெளியிட்டு இருக்க கூடும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.