பெங்களூரு
மாநில முதல்வர் சித்தராமையா பேசும் போது மத்திய அரசு மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகளுக்கான ரூ. 26,000 கோடியை மத்திய அரசு 100 சதவீதம் வழங்க வேண்டும் என்றார். அவருக்கு பின்னர் பேசிய ஆளுநர், முதலவர் முக்கிய விஷயத்தை விட்டு விட்டார் என நினைக்கிறேன். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு 100 சதவீத நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்றார். வெங்கய்யா நாயுடு மூன்று முறை கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவராவார். எனவே அந்த மாநிலத்திற்கு கடன் பட்டிருக்கிறார்; இதற்கு சாதகமாக அவர் செயல்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார்.
இதை அவர் குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள் என பல முக்கியஸ்தர்கள் குழுமியிருந்த அவையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் வாலா மோடி முதல்வராக இருந்த போது ஆறு வருடங்களுக்கு குஜராத்தின் நிதியமைச்சராக இருந்தவராவார்.
முதல்வர் சித்தராமையா பெங்களூரு மெட்ரோவின் முதல் கட்டத்திற்கு ரூ. 13, 845 கோடி செலவானதாகவும், இரண்டாம் கட்ட பணிக்கு ரூ. 26,000 கோடி செலவாகும் என்றும் கூறினார். பெங்களூரு மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு 50 சதவீதம் வரை நிதியுதவி செய்ய உறுதிமொழி கொடுத்துள்ளது. ஆனால் ஆளுநர் 100 சதவீதம் நிதியை கொடுக்க கோரிக்கை எழுப்பியது அரசியலாகவே பார்க்கப்படுகிறது.