புதுடெல்லி,
இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி இதுவரை 91 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 110 பேர் காணாமல் போகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. இந்த மீட்பு பணியில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அண்டை நாடுகளின் உதவியை இலங்கை கோரியிருந்தது. இதையடுத்து, உடனடியாக நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் அடங்கிய இரண்டு கப்பல்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அதில், ஒரு கப்பல் இன்று இலங்கை சென்றடைந்தது. மற்றொரு கப்பல் ஞாயிற்றுக்கிழமை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிர்சேதங்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கிறது. தேவைப்படும் இந்த நேரத்தில் நாங்கள் இலங்கை சகோதர,சகோதரிகளுக்கு துணையாக நிற்கிறோம். நிவாரணப்பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.