ஸ்ரீநகர்,
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மாவட்ட வளர்ச்சி மன்றம் என்ற உள்ளாட்சி அமைப்புக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. கடந்த மாதம் 28ந் தேதி தொடங்கி இம்மாதம் 19ந் தேதிவரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த முதலாவது தேர்தல் இதுவே ஆகும். மாவட்ட வளர்ச்சி மன்றத்தின் 280 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. 2 ஆயிரத்து 178 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அமைதியாக நடந்த இத்தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட 6 கட்சிகள் இணைந்து கூட்டணியாக போட்டியிட்டன. பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன.
இந்தநிலையில், நேற்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது. பல வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குச்சீட்டுகள் ஒன்றாக கலக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், மாநில கட்சிகளின் கடும் போட்டியையும் மீறி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் பா.ஜனதா வெற்றிக்கணக்கை தொடங்கியது.
முடிவு அறிவிக்கப்பட்ட 276- இடங்களில் குப்கார் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குப்கார் கூட்டணி 112- இடங்களில் வென்றுள்ளது. 74- இடங்களில் வென்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சுயேட்சைகள் 49 இடங்களிலும் காங்கிரஸ் 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஜம்முவில் பாஜகவும், காஷ்மீர் மாவட்ட கவுன்சில்களில் குப்கார் கூட்டணியும் அதிக இடங்களை வென்றுள்ளன.