புதுடெல்லி,
ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரையிடம் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதை எதிர்த்து அப்பாவு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் மற்றும் கடைசி 3 சுற்று வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. அதன்படி ஐகோர்ட்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்பதுரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட கோர்ட்டு தடைவிதித்தது.
மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை நாளை (இன்று) அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் விசாரணைக்கு வரவில்லை.
இதனால் அப்பாவு தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் முறையீடு செய்தார். மறு வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் கோர்ட்டு தடை உள்ளதால் முடிவு இன்னும் அறிவிக்கவில்லை.
எனவே வழக்கை விரைந்து விசாரித்து தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு நீதிபதி அருண்மிஸ்ரா, இந்த வழக்கை நாளை விசாரிக்க உறுதியளிக்க இயலாது எனவும் பட்டியல்படி விசாரணைக்கு வந்தால் விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.