தளர்வுகளுடன் ஊரடங்கு
அதன்படி அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள், மார்க்கெட்டுகள் மட்டும் திறக்கப்பட்டன. அடுத்தடுத்து தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. இதில் பலன் கிடைத்ததன்படி பொது போக்குவரத்து, தியேட்டர்கள், சுற்றுலாதலங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடவும், மதுக்கடைகள், பார்கள் திறக்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
அதிகாரிகள் பரிந்துரை
அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாலும் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.இந்தநிலையில் புதுச்சேரியில் ஏறக்குறைய அனைத்துக் கட்டுப்பாடுகளும் கொரோனா நெறிமுறைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்பதால் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கவேண்டாம் என்று பரிந்துரைத்தனர். மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
புதுவையிலும் திறப்பு?
இந்தநிலையில் தமிழகத்தில் வரும் 1-ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது முதற்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கு வந்து வகுப்புகளை கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.இதன்பின் அடுத்தடுத்த வகுப்புகள் திறக்கப்படுவது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத் திட்டங்களையே பின்பற்றி வருவதால் புதுவையிலும் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
அமைச்சர் நமச்சிவாயம்
இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்ட போது, புதுவை மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. கவர்னரும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் கட்டாயம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுவையில் பள்ளிகளை திறப்பது குறித்தும், மாணவர்களை பாதுகாப்பாக வரச்செய்து வகுப்பறைகளை நடத்துவது குறித்தும் கவர்னர், முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி அதன்பின் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.