புதுடெல்லி,
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுமைபடுத்தியதை குறிப்பிடும்வகையில், ஒற்றுமை சிலை என்று இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிபிஐ மற்றும் ஆர்பிஐ (ரிசர்வ் வங்கி) விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அரசு எதிர்க்கொண்டுள்ளது. இப்போது பிரதமர் மோடி வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து கடுமையான விமர்சனம் வந்துள்ளது.
ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சர்தார் வல்லபாய் படேல் உதவியால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் அரசு துறைகள் அனைத்தும் நிர்மூலமாக்கப்படும் நிலையில் அவருடைய சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசு துறைகளை திட்டமிட்டு அழிப்பது தேசத்துரோகத்திற்கு சற்றும் குறைந்தது கிடையாது, என விமர்சனம் செய்துள்ளார். மற்றொரு டுவிட் செய்தியில், சர்தார் படேல் ஒரு தேசபக்தர், அவர் சுதந்திரமான, ஒற்றுமையான மற்றும் மதசார்பற்ற இந்தியாவிற்காகவும் போராடியவர். இரக்கம் மற்றும் கருணையை கொண்ட மனிதர் காங்கிரஸை சேர்ந்தவர், சகிப்புத்தன்மையின்மை, மதவாதத்தை அவர் சகித்துக்கொள்ளவில்லை. அவருடைய பிறந்த நாளில், இந்தியாவின் மகத்தான மகனுக்கு என்னுடைய மரியாதையை செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.