பெங்களூரு,
கர்நாடகாவில் சமீப காலமாக பெங்களூரு உள்பட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த நிலையில், தார்வாரில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. தார்வார் மருத்துவ கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 281 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 1,800க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை வரவேண்டி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் தற்போது ஒமிக்ரான் என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது, இதற்கு முன்பு இருந்த கொரோனா வைரசை காட்டிலும் 5 மடங்கு வேகமாக பரவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கவும், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவும் விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து பஸ், ரெயில் நிலையங்களிலும் மீண்டும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகாவுக்கு திரும்பி வந்த 2 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பெங்களூருவில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஊரடங்கிற்கான கேள்வியே இல்லை. வழக்கம்போல் பணிகள் செயல்படும் என கூறியுள்ளார். கர்நாடகாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படாது, அதனால் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
எனினும், பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதேபோன்று நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளும் பொறுப்புடன் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.