பெங்களூரு,
கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், கொரோனாவுக்கு பலியான ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பெங்களூருவில் கடந்த 10-ந் தேதி பிரமாண்ட ஊர்வலம் நடத்தினார்கள். சுதந்திர பூங்காவில் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்களுடன், போக்குவரத்து துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதி பேச்சு வார்த்தை நடத்தவில்லை.
இதன் காரணமாக நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிமனைகளில் இருந்து பஸ்களை இயக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன.
அதாவது மாநிலத்தில் 16 ஆயிரத்து 733 அரசு பஸ்கள் தினமும் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் 3,770 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அவ்வாறு இயக்கப்பட்ட பஸ்கள் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டன. இதனால் 50-க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன், துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.
இதனால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் விரல் விட்டு எண்ணும் அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டன. பஸ் நிலையங்கள், பணிமனைகளின் முன்பாக அமர்ந்து 2-வது நாளாகவும் டிரைவர்கள், கண்டக்டர்கள், பிற ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பேசினார். பின்னர் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதலில் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும்படி முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (அதாவது இன்று) காலை 10 மணியளவில் பெங்களூரு விகாச சவுதாவில் போக்குவரத்து சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு வரும்படி தொலைபேசியில் அழைத்து பேசினேன். அவர்களும் பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு போக்குவரத்தில் உள்ள 4 கழகங்களை சேர்ந்த சங்கங்களின் தலைவர்கள், பிற நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள். கோடிஹள்ளி சந்திரசேகர் விவசாய சங்க தலைவர். அவருக்கும், போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
போக்குவரத்து கழக ஊழியர்களின் முதல் கோரிக்கையான அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பதை நிறைவேற்றுவது மிகவும் கடினம். அதை தவிர்த்து ஊழியர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது. அதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாணப்படும். அரசு ஊழியர்களை காட்டிலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு பிற சலுகைகள், சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்