5 மாநில தேர்தல்
உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு ஆளும் பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாகி வருகின்றன.
இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மந்திரியுமான நவாப் மாலிக் கூறியதாவது:-
1993-ம் ஆண்டு நிலவரம்
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடும் ஒரு தொகுதி முடிவு செய்யப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நீடிக்கிறது.
1993-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதை போன்ற நிலையே தற்போதும் உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. 1993-ம் ஆண்டு உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் அப்போதைய தலைவரான கன்சிராமுடன் கைகோர்த்து பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடிய பா.ஜனதாவின் அடையாள அரசியலை உத்தரபிரதேச மக்கள் நிராகரித்து வருகின்றனர். எனவே தலித்துகள், இதர பிற்பட்டுத்தப்பட்ட வகுப்பு தலைவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாய குழுவினர் போன்றவர்கள் பா.ஜனதாவில் இருந்து விலகி வருகின்றனர்.
மணிப்பூர், கோவா
இதேபோல மணிப்பூர் தேர்தலில், காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் கோவாவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனவே கடந்த முறை போல கோவா தேர்தலில் தனித்து போட்டியிட தேசியவாத காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.