கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் ஒரே கல்லில் பிரமாண்ட பெருமாள் சிலை செதுக்கப்பட்டது.
அந்த சிலை கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட பெரிய லாரியில் புறப்பட்டது. இது பல்வேறு நகரங்கள் வழியாக கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு கடந்த 16-ந் தேதி வந்தது. அங்கிருந்து வரும் வழியில் பாம்பாறு தரைப்பாலத்தில் மண் கொட்டப்பட்டு தற்காலிக பாலம் சீரமைக்கப்பட்டு, ராட்சத எந்திரங்களின் உதவியுடன் சிலை உள்ள லாரி கொண்டு வரப்பட்டது. வரும் வழியில் பல்வேறு இடங்களில் லாரிகளின் டயர்கள் வெடித்ததால் லாரி வருவதில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலையுடன் இருந்த அந்த லாரி கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை மேம்பாலத்தை அடைந்தது. நேற்று முன்தினம் காலை அங்கிருந்து லாரி புறப்பட்டது. அந்த லாரி கிட்டம்பட்டி வழியாக கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலத்தை அடைந்தது. அங்கு பெங்களூரு சாலைக்கு செல்ல ஆவின் மேம்பாலத்தின் அடியில் லாரி வளைய முடியாது என்பதால் எதிர் திசையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக லாரியை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள 6 வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து பெருமாள் சிலையுடன் லாரி கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலைக்கு சென்றது. தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் பெருமாள் சிலை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அடைந்தது. அங்கு பெருமாள் சிலை உள்ள லாரி செல்வதற்கு வசதியாக சுங்கச்சாவடியில் இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
குந்தாரப்பள்ளி அடுத்த திப்பனப்பள்ளி சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் மாலை நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் குருபரப்பள்ளியில் உள்ள மார்க்கண்டேயன் நதியின் குறுக்கில் உள்ள மேம்பாலத்தைக் கடக்க முடியாது என்பதால், ஆற்றில் தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நேற்று காலை தொடங்கியது. இந்த பணியில் 5 பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு, பள்ளமான இடங்களில் ராட்சத கல்லை அடுக்கி அதன்மீது மண்ணைக் கொட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி 2 நாளில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே கோதண்டராமர் பெங்களூரை நோக்கி செல்ல உள்ளது.
இந்த சிலை கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் குருபரப்பள்ளி, மேலுமலை, சின்னார், சூளகிரி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பேரண்டப்பள்ளி, ஓசூர் வழியாக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியை அடைய உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பெருமாள் சிலை கர்நாடக மாநில எல்லையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.