செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாருக்கு 3 நாள் சி.பி.ஐ. காவல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாரை 3 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணையின் பேரில் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இதை கொலை வழக்காக மாற்றியதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் தமிழக அரசு விடுத்த கோரிக்கையின் பேரில், இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றிய அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து, மேற்கொண்டு விசாரணயை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, ஜெயராஜ், பென்னிக்ஸின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து போலீசாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்தனர்.

காவலர்கள் வெயில்முத்து, சாமதுரை, செல்லதுரை ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட காவலர்கள் 3 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து தற்போது காவலர்கள் 3 பேரையும் வரும் 23 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்