சிறப்புக் கட்டுரைகள்

பழுப்பு நிற குள்ளர்கள்: கோளும் அல்ல நட்சத்திரமும் அல்ல!

நாம் அண்ணாந்து பார்க்கும் வானத்தில் மின்னும் ஆயிரம் நட்சத்திரங்கள் நம் கண்களையும், கருத்தையும் கவர்கின்றன.

தினத்தந்தி

ஆனால் அவற்றுக்கு இடையில் நட்சத்திரங்களைப்போல மின்னும் திறனற்ற, மங்கலான ஒளி வீசும் பல விண்வெளி உருவங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை அல்லது நம் கண்களுக்குத் தெரிவதேயில்லை.

அவை, ஒன்று பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள் களாக இருக்க வேண்டும். அல்லது, பழுப்பு நிற குள்ளர்கள் எனப்படும் கோளுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடைப்பட்ட ஒரு விண்வெளி உருவமாக இருக்க வேண்டும் என்கிறது வானவியல்.

அது சரி, கோள் என்றால் என்னவென்று தெரியும். பழுப்பு நிற குள்ளர்கள் என்றால் என்ன?

ஒரு கோளை விட மிகப்பெரியதாகவும், ஆனால் அதேசமயம் ஒரு நட்சத்திரத்தை விட சிறியதாகவும் இருக்கும் விண்வெளி உருவங்களையே வானவியலில் பழுப்பு நிற குள்ளர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

இதற்கான அறிவியல் விளக்கம் இதோ:

ஒரு நட்சத்திரம் தொடர்ந்து ஒளிர்வதற்கு ஒளி அவசியம். தங்களிடம் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை நியூக்ளியர் பியூஷன் எனும் இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலமாக இந்த ஒளியை நட்சத்திரங்கள் உற்பத்தி செய்கின்றன. இவ்வாறு ஒளியை உற்பத்தி செய்யும் திறன் இல்லை என்றால் அவை நட்சத்திர அந்தஸ்தை பெற முடியாமல் தோற்றுப்போகும். அவ்வாறு உள்ள நட்சத்திரங்களே பழுப்பு நிற குள்ளர்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஹைட்ரஜன் அணுக்களை இணைக்கும் நியூக்ளியர் பியூஷன் நிகழ்வைத் தூண்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஈர்ப்பு விசையும் (gravity), அந்த ஈர்ப்பு விசையை உற்பத்தி செய்ய ஒரு குறிப்பிட்ட அளவு எடையும் அவசியம். இவை இரண்டும் பழுப்பு நிற குள்ளர்களுக்கு இல்லாத காரணத்தாலேயே அவற்றால் நட்சத்திரங்களாக வானில் மின்ன முடிவதில்லை என்கின்றனர் விண்வெளி ஆய்வாளர்கள்.

ஆனால், நட்சத்திரங்களுக்கு நிகரான எடையும், அளவும் கொண்ட இரண்டு பழுப்பு நிற குள்ளர்களை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள கார்னெகி இன்ஸ்டிடியூஷன் பார் சயின்ஸ் (Carnegie Institution for Science) ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கி றார்கள்.

எப்சிலான் இண்டி பி மற்றும் சி (Epsilon Indi B and C) என்று அழைக்கப்படும் இந்த இரண்டு பழுப்பு நிற குள்ளர்கள் வியாழன் கிரகத்தின் எடையைப் போல சுமார் 70 மடங்கு அதிகமான எடை கொண்டவை என்பதால் அவை நட்சத்திரங்களுக்கு நிகரானவை என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் அவற்றின் மிகவும் மங்கலான ஒளிர்வு காரணமாக அவை நட்சத்திரங்கள் அல்ல என்றே பின்னர் உறுதி செய்யப்பட்டது.

அதேசமயம், நட்சத்திரங்களுக்கு நிகரான எடை இருந்தும் பழுப்பு நிற குள்ளர்களால் நட்சத்திரங்களின் ஒளிர்வை ஏன் பெற முடியவில்லை என்ற ஆழமான கேள்வியையும் இந்த கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

பூமியில் இருந்து சுமார் 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும், இண்டஸ் கான்ஸ்டெல்லேஷனுக்குள் உள்ள எப்சிலான் இண்டி அமைப்பில் நம் சூரியனில் சுமார் முக்கால் மடங்கு எடை கொண்ட ஒரு நட்சத்திரமும், எப்சிலான் இண்டி பி மற்றும் சி ஆகிய இரண்டு பழுப்பு நிற குள்ளர்களும் இருப்பது கடந்த 2003-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, எப்சிலான் இண்டி பி மற்றும் சி-யின் எடைகள் 47 மற்றும் 28 வியாழன் கிரகங்களுக்கு நிகரானது என்றும் கணக்கிடப்பட்டது.

ஆனால், அந்த அளவானது தவறு என்றும், எப்சிலான் இண்டி பி-யின் எடை சுமார் 75 வியாழன் கிரகங்களுக்கும், எப்சிலான் சி-யின் எடை சுமார் 70.1 வியாழன் கிரகங்களுக்கும் சமமானது என்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த இரண்டு எடை அளவுகளும் பழுப்பு நிற குள்ளர்களின் பொதுவான எடையான 70 வியாழன் கிரக எடையைவிட அதிகமானவை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆக, எப்சிலான் பி மற்றும் சி ஆகிய இரண்டும் நட்சத்திரங்களுக்கு நிகரான எடை கொண்டிருக்கும்போதும் அவற்றால் நட்சத்திரங்களாக ஜொலிக்க, மின்ன முடியாமல் போனதற்கு காரணம் என்ன என்பதை ஆய்வாளர்கள் தற்போது கண்டறிய முயன்று வருகிறார்கள்.

மேலும் முக்கியமாக, நட்சத்திரத்துக்கு நிகரான எடை கொண்ட இந்த பழுப்பு நிற குள்ளர்களின் விதி அல்லது அடுத்த நிலை என்ன என்பதையும், விண்வெளியில் உள்ள நட்சத்திர தோற்றப்பகுதிகளில் பழுப்பு நிற குள்ளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஆகிய இரண்டு விண்வெளி அமைப்புகளும் எந்த விகிதத்தில் இருக்கின்றன என்பதையும் தற்போது ஆய்வு செய்து வருகிறது விண்வெளி ஆய்வாளர் டீட்டெறிச் தலைமையிலான கார்னெகி இன்ஸ்டிடியூட் பார் சயின்ஸ் ஆய்வுக்குழு.

- தொகுப்பு: ஹரிநாராயணன்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்