தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஜானகி போட்டியிட்டார். இவர் 38 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மற்றொரு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்து வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஜானகியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். 2-வது இடம் பெற்றவரை வெற்றி பெற்றதாக அறிவித்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
அப்போது அவர்கள் ஊராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் அலுவலர்கள் விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஜானகியின் ஆதரவாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.