மதுரை,
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்தஊர்களுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வழக்கமான ரெயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலில் ஏராளமான பயணிகள் உள்ளனர்.
அதிலும், நாளை (புதன்கிழமை) சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்படும் அனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் காத்திருப்போர் பட்டியல் முடிந்து, முன்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
அதன்படி, கோவை-நாகர்கோவில் நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.0266702668) 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 2 மற்றும் 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி ஒன்றும் இரு மார்க்கங்களிலும் இணைக்கப்படுகிறது. இந்த பெட்டிகள் வருகிற 9-ந் தேதி வரை இணைக்கப்பட்டு இருக்கும்.
ராமேசுவரம்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.0661706618) ஒரு 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த பெட்டி கோவையில் இருந்து புறப்படும் ரெயிலில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் ரெயிலில் 3-ந் தேதியும் இணைக்கப்படுகிறது.
தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரசில் (வ.எண்.0269302694) ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த பெட்டி தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரெயிலில் வருகிற 7-ந் தேதி வரையிலும், சென்னையில் இருந்து புறப்படும் ரெயிலில் வருகிற 10-ந் தேதி வரை இணைக்கப்பட்டிருக்கும். கன்னியாகுமரி-சென்னை எக்ஸ்பிரசில் (வ.எண்.0263302634) ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டி சென்னையில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் வருகிற 8-ந் தேதி வரையிலும், கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் வருகிற 9-ந் தேதி வரையிலும் இணைக்கப்பட்டிருக்கும்.
கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரசில் (வ.எண்.0672306724) ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த பெட்டி சென்னையில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் வருகிற 11-ந் தேதி வரையிலும், கொல்லத்தில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் வருகிற 12-ந் தேதி வரையிலும் இணைக்கப்பட்டிருக்கும்.
ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரசில் (வ.எண்.0220502206) ஒரு 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த பெட்டி ராமேசுவரத்தில் இருந்து வருகிற 10-ந் தேதி வரையிலும், சென்னையில் இருந்து வருகிற 13-ந் தேதி வரையிலும் இணைக்கப்பட்டிருக்கும்.
ராமேசுவரம்-சென்னை சேது எக்ஸ்பிரசில் (வ.எண். 0685106852) ஒரு 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த பெட்டி, ராமேசுவரத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை), சென்னையில் இருந்து நாளை (புதன்கிழமை) இணைக்கப்படும்.
அதேபோல, கூடுதல் ரெயில்களும் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த ரெயில்கள் அனைத்தும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்களாக இயக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் (வ.எண்.06037) வருகிற 3-ந் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. காலை 11 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.06038) வருகிற 5-ந் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
நெல்லையில் இருந்து தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக தாம்பரத்துக்கு வருகிற 7-ந் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06040) நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நெல்லைக்கு வருகிற 8-ந் தேதி ஒரு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06039) தாம்பரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 11.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 3 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரெயில் மதுரையில் இருந்து விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த சிறப்பு கட்டண ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.