27 சதவீத இடஒதுக்கீடு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின்மூலம் அ.தி.மு.க.வின் நீண்ட நாளைய இடைவிடாத கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு, பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அதிகளவு இடங்களைப் பெற வழி வகுத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 340-வது விதியின்படி சமுதாய நிலையிலும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆராய்ந்து அவர்களை முன்னேறச் செய்வதற்கான முறைகள் பற்றி வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தது அ.தி.மு.க. அரசு என்று சொன்னால் அது மிகையாகாது.
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
1993-ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் சட்டத்தை நிறைவேற்றி அதனை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைத்து 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்தவர், ஜெயலலிதா. அதனைத்தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவச் சேர்க்கைகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்காததை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த பிரச்சினை குறித்து முடிவு செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு 27.7.2020 அன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 29.7.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 15 சதவீத இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கும், 50 சதவீத முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும் என்று உத்தரவிட்டது.
கேலிக்கூத்தாக உள்ளது
இதற்கு அ.தி.மு.க.வின் தொடர் வலியுறுத்தல் ஒரு முக்கிய காரணமாகும். இந்த ஆணையை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இது அ.தி.மு.க.வின் தொடர் போராட்டத்திற்கு, தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி.
கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்து, இதற்காக ஒரு குரல் கூட எழுப்பாத தி.மு.க., இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத தி.மு.க., வாய்மூடி மவுனியாக இருந்த தி.மு.க., சுயநலத்திற்காக பொதுநலத்தைத் தாரை வார்த்த தி.மு.க., அ.தி.மு.க.வின் நீண்ட நாள் போராட்டத்தினால், வலியுறுத்தலினால் கிடைத்த வெற்றியை தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.