சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தின் முன் நேற்று ஆஜரானார். மக்களவை எம்.பி. தம்பிதுரை இன்று ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தினை அளித்து உள்ளார்.
அவரிடம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், சசிகலா தரப்பு வழக்கறிஞர், அப்பல்லோ நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தினர்.
இதன்பின்னர் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த சந்தேகமும் இல்லை என தம்பிதுரை எம்.பி. கூறினார்.
சசிகலா முதல் அமைச்சராக வேண்டும் என நானும், பொள்ளாச்சி ஜெயராமன், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரும் ஆதரவு கடிதம் கொடுத்தோம் என்றும் தம்பிதுரை எம்.பி. கூறினார்.
லண்டனில் கடந்த 2018ம் ஆண்டில் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை சந்தித்ததை தம்பிதுரை ஆணையத்தில் ஒப்புக்கொண்டார் என ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்து உள்ளார்.