தமிழக செய்திகள்

மார்ட்டின் நிறுவன கேஷியர் மரணத்தில் திடீர் திருப்பம்: “கொலை செய்யப்பட்டு இருக்கலாம்” என்று டாக்டர் அறிக்கையில் தகவல்

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன கேஷியர் பழனிசாமியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கோர்ட்டில் டாக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கோவை,

கோவை துடியலூரில் லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகம் உள்ளது. இங்கு கேஷியராக பணியாற்றி வந்தவர் கோவை, உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (வயது45).

இந்த நிலையில், மார்ட்டின் நிறுவனத்தில் கடந்த மே மாதம் 1-ந் தேதி வருமானவரி சோதனை நடைபெற்றது. அப்போது பழனிசாமியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மே மாதம் 3-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பழனிசாமி காணாமல் போனார். அவர், காரமடை வெள்ளியங்காடு பகுதியில் உள்ள ஒரு குட்டையில் பிணமாக கிடந்தார்.

இதனால் தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் பழனிசாமியின் மகன் ரோகின்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக விசாரிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க கோவை தலைமைக் குற்றவியல் நீதிபதி எஸ்.நாகராஜனுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பழனிசாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோவை 8-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு எம்.ராமதாஸ் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு எம்.ராமதாஸ், பழனிசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும், பழனிசாமியின் உடலை ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழு அல்லாமல் 2-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொண்ட குழுவினரை வைத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு உத்தரவிட்டார். இந்த புதிய மருத்துவர்கள் குழுவில், மனுதாரர் (ரோகின்குமார்) தரப்பில் பரிந்துரை செய்யப்பட்ட டாக்டர் பி.சம்பத்குமார் என்பவரையும் சேர்க்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி பழனிசாமியின் உடல் மறு பிரேத பரிசோதனை மே மாதம் 28-ந் தேதி நடைபெற்றது. பழனிசாமி தரப்பு டாக்டராக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் சம்பத்குமார், அரசுத் தரப்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கோகுல்ராம், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேஷ் ஆகியோர் மறு பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து பழனிசாமியின் உடல் அவருடைய மனைவி மற்றும் மகன்களிடம் கடந்த மாதம் 12-ந் தேதி ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் பழனிசாமி குடும்பத்தினர் தரப்பில் இருந்து மறுபிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் சம்பத்குமார் தனது அறிக்கையை மூடிமுத்திரையிட்ட கவரில், மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தார்.

இதுகுறித்து டாக்டர் சம்பத்குமார் கூறுகையில், பழனிசாமி நீரில் மூழ்கி இறந்தாரா? இல்லையா? என்பதைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் தானாக நீரில் மூழ்கி இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மூச்சுத்திணறடித்து உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கலாம். அவர் கொலைதான் செய்யப்பட்டாரா? என்பது போலீசாரின் இறுதி விசாரணைக்கு பின்னர் தான் தெரியவரும் என்றார்.

பழனிசாமி குடும்பத்தினர் தரப்பு வக்கீல் பன்னீர்செல்வம் கூறும்போது, எங்கள் தரப்பு டாக்டர் மேற்கொண்ட மறுபிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். அதில் பழனிசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற இரு டாக்டர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அவர்களது அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்