சென்னை,
இந்தியாவில் கொரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இன்று வரை மொத்தம் 1,431 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,48,045. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,62,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,03,799 ஆகும்.
இந்த சூழலில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது. திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, திருமணம், துக்க நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஒமைக்ரான் பரவ வாய்ப்பு உள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒமைக்ரான் பரவுவதால் அதிக தளர்வுகள் அளிக்க தமிழக அரசு விரும்பவில்லை. ஒமைக்ரான் பாதித்தவர்களில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு கொரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.