புதுச்சேரி,
யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டத்தின்படி, காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், பொருளாளர் கே.ஜி.சங்கர், கட்சியின் ஆதரவாளர் எஸ்.செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார். இந்த நியமன உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததையடுத்து, 3 பேருக்கும் ஆளுநர் கிரண் பேடியே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகளின்படியும், அரசியல் சாசன சட்டத்தின்படியும் இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பதவிப் பிரமாணம் தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி, இந்த நியமனம் செல்லாது என்றும் இந்த 3 பேரை சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு அனுமதிக்க முடியாது என்றும் கடந்த ஆண்டு நவம்பரில் சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்ததாக பேரவை செயலாளர் உத்தரவிட்டார்.
சட்டப்பேரவை செயலாளரின் இந்த உத்தரவை எதிர்த்து, நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேர் சார்பிலும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது. நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் போது துணைநிலை ஆளுநர் அமைச்சரவையின் கருத்துகளைக் கேட்க எந்தவிதமான கட்டாயமும் இல்லை. அதேபோன்று, இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3 நியமன எம்எல்ஏக்களை புதுச்சேரி சட்டப்பேரவையில் அனுமதிக்க இயலாது என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார். சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும், சபாநாயகரின் கருத்தை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.