தமிழக செய்திகள்

தமிழகம் போராட்ட களமாக மாறிவரும் நிலையில் கவர்னர் புரோகித்துடன் முதல்-அமைச்சர் பழனிசாமி சந்திப்பு

தமிழகம் போராட்ட களமாக மாறிவரும் நிலையில் கவர்னர் புரோகித்தை முதல்-அமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார். #EdappadiPalaniswami

தினத்தந்தி

புதுடெல்லி,

காவிரி பிரச்சினையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து, தமிழகம் போராட்ட களமாக மாறி வருகிறது. இதே பிரச்சினையில், நாடாளுமன்றமும் முடக்கப்படுகிற நிலை நீடிக்கிறது.

அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பு போராட்டத்தை நடத்தியது.

நாளை (5-ந்தேதி) தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு மற்றும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 6-ந்தேதி தே.மு.தி.க. தரப்பில் ஆர்ப்பாட்டம், திருச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் உண்ணா விரத போராட்டம், 11-ந்தேதி பா.ம.க. மற்றும் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு போராட்டம் என பல தரப்பினரும் போராட்டங்களை அறிவித்து உள்ளனர்.

இத்தனைக்கும் மத்தியில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 65 நாடுகள் பங்கேற்கும் ராணுவ கண்காட்சியை 11-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் வருகையின்போது தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிற சூழல், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கவர்னர் புரோகித், அரசு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு அழைத்து, சட்டம்-ஒழுங்கு குறித்து விசாரித்து அறிந்தார். அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் கவர்னர் புரோகித், டெல்லி விரைந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் நடந்து வருகிற போராட்டங்கள் குறித்தும், சட்டம்-ஒழுங்கு நிலவரம் பற்றியும் விளக்கி, ஆலோசனை நடத்தியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் கவர்னர் புரோகித் சந்தித்து பேசினார். அவரிடமும் தமிழக நிலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து அவர் விளக்கியதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் தொடர்பாக மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையைத் தொடர்ந்துதான், மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னர் புரோகித்தை டெல்லிக்கு அழைத்து பேசி இருப்பதாக தெரியவந்து உள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார்.

இந்தநிலையில் ஆளுநர் பன்வாரிலாலை ராஜ்பவனில் முதல்-அமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசுகிறார் என தகவல் வெளியாகியது. காவிரி விவகாரம், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடையும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனையை நடத்தினார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர், டி.ஜி.பி ஆகியோருடன் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். எதிர்க்கட்சிகள் தரப்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளநிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க முதல்-அமைச்சர் பழனிசாமி புறப்பட்டு சென்றார்.

கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து உள்ளனர். காவிரி விவகாரம், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆளுநருடன் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.பி. ஜெயவர்தனன் பங்கேற்று உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்