தமிழக செய்திகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் ; பா.ஜ.க.-அ.தி.மு.க வெளிநடப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

தினத்தந்தி

சென்னை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த புதிய சட்டங்களால் தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் என்றும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 9 மாதங்களுக்கும் நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். ஆனால் எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற மாட்டாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-

3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; இந்த சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்; அதனை எதிர்த்து போராட்டமும் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் வாழ்வுசெழிக்க 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

தீர்மானத்தின் மீது பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன். பேசும் போது கூறியதாவது:-

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் வேளாண் சட்டங்கள் உள்ளன; விவசாயிகளின் வேதனையை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம் என கூறினார்.

விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பா.ம.க. சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது போராடும் விவசாயிகளுக்கு நான் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் என கூறினார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கே.பி.அன்பழகன் பேசும் போது அவசர அவசரமாக தனித் தீர்மானம் கொண்டு வராமல், அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து மத்திய அரசிடம் வலியுறுத்தலாம்; அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும் என கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது கூறியதாவது;-

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். வேளாண் சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம்; பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம் என கூறினார்.

வேளாண் சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து குழந்தைக்கு கூட தெரியும்; ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா ?ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவை முன்னவர் துரைமுருகன் கேள்வி விடுத்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்கமறுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்