காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை மீது சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார்.
இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்திடம் தெரிவிப்பார். கோவில் நிர்வாகம் சார்பில் சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை 2 பூக்கள் வைத்து, வெள்ளை பூ வந்தால் மட்டும் அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு தொடர்ந்து தினமும் பூஜை செய்யப்படும். கடந்த செப்டம்பர் 17-ந் தேதி முதல் செம்மண் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று முதல் செம்மண் அகற்றப்பட்டு 3 கதிர் அறுக்கும் அரிவாள்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இதை திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுங்கிலியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பி.வேலுச்சாமி (வயது 80) என்பவர் முருகன் தனது கனவில் வந்து கூறியதாக கூறினார். இதையடுத்து பூ போட்டு பார்த்து கதிர் அறுக்கும் அரிவாள்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.