சென்னை,
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்காத நாடுகளே இல்லை என்று கூறலாம். கொரோனாவை ஒழித்து கட்டுவதற்கு இந்தியா உள்பட உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் தடுப்பூசியை முதலில் யார் கண்டுபிடிப்பது என்பதில் உலக நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் ரஷியா ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்ததாக அறிவித்தது. ஆனாலும் அதற்கான இறுதிக்கட்ட ஆராய்ச்சிகள் இன்னும் முடிவடையவில்லை. இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்றதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அதன் உடன் இணைந்துள்ள அஸ்ட்ரா ஜெனகா என்ற மருந்து நிறுவனம் இந்த தடுப்பூசியை எந்தெந்த நாடுகளில் தயாரிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற தடுப்பூசி நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் உள்ளது. இதற்கிடையே இந்தியாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்து பார்ப்பதற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, சண்டிகாரில் உள்ள பிஜிமெர் மருத்துவமனை, புனேயில் உள்ள ஏ.பி.ஜெ.மருத்துவ கல்லூரி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மருத்துவ கல்லூரி உள்பட 17 இடங்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனை நேற்று முதல் தொடங்கியது. நாடு முழுவதும் 1,600 பேரிடம் இந்த தடுப்பூசி சோதனை நடத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய 2 இடங்களிலும் சுமார் 300 பேரிடம் இந்த கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த தடுப்பூசி திட்டத்துக்கு தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடம்பில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து, உடனடியாக அதனை அழித்துவிடும். மேலும் 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடம்பில் உருவாக்கிவிடும்.
இதனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனை வருகிற அக்டோபர் மாதம் வாக்கில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிசோதனையில் தடுப்பூசி நல்ல பலனை கொடுத்தால், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இந்த ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய தொடங்கும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி, மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி சென்னையில் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ரஷியாவும் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தடுப்பூசி பரிசோதனைகள் இந்தியாவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு சாவு மணி அடிக்கும் தடுப்பூசிகள் வந்துவிடும் என்று நம்பிக்கை விதை மக்கள் மனதில் தூவப்பட்டிருக்கிறது.