கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

காலை உணவுத் திட்டத்திற்கு தரப்படும் முக்கியத்துவம் சத்துணவுத் திட்டத்திற்கும் தரப்பட வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

சத்துணவுத் திட்டத்திற்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தினத்தந்தி

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சிறுவர் சிறுமியர் பள்ளிகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், இடைநிற்றலைத் தடுக்கும் வகையிலும், ஏழையெளிய குழந்தைகளின் ஊட்டச் சத்தினை மேம்படுத்தும் வகையிலும், எழுத்தறிவு விகிதத்தினை அதிகரிக்கும் வகையிலும், பெண்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1982-ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டம்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்.

இந்தத் திட்டத்தின்மூலம், ஏழையெளிய மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பினைப் பெற்றதோடு, லட்சக்கணக்கான பெண்களும் அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றனர். இந்தத் திட்டம் இந்தியத் திருநாட்டிற்கே முன்மாதிரியான திட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தி.மு.க. அரசு அதிக அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது நிலவுகிறது. காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதற்கு அளிக்கும் முக்கியத்துவம் சத்துணவுத் திட்டத்திற்கு அளிக்கப்படுவதில்லை என்றும், சத்துணவு மையங்களில் சமைக்கப்படும் வெஜிடெபிள் பிரியாணி, கொண்டை கடலை சாம்பார், சத்தான கலவை சாதம் போன்றவற்றிற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பள்ளிகள் திறந்து பல வாரங்களாகியும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டினைக் களைய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை உணவுத் திட்டத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் சத்துணவுத் திட்டத்திற்கும் தரப்பட வேண்டும். சத்துணவு திட்டத்திற்கான உணவுப் பொருட்கள் விநியோகத் தொடர் மேலாண்மையில் குளறுபடி ஏற்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்