தமிழக செய்திகள்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலி

ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலியானார். டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் சேஷாத்திரி அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் கழிவுநீரை அகற்றுவதற்காக நேற்று மாலை லாரி டிரைவர் முத்துகுமார் (வயது 30), கிளீனர் திராவிட கதிரவன் (29) ஆகியோர் கழிவுநீர் லாரியில் வந்தனர். சுமார் 10 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்த கழிவுநீரை மோட்டார் மூலம் லாரிக்கு ஏற்றி கொண்டிருந்தனர்.

கிளீனர் திராவிட கதிரவன், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி இரும்பு கம்பியால் தொட்டியில் உள்ள கழிவுநீரை கலக்கி உள்ளார்.

விஷவாயு தாக்கி பலி

அப்போது எதிர்பாராதவிதமாக அவரை விஷவாயு தாக்கியது. இதில் திராவிட கதிரவன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த டிரைவர் முத்துகுமார், அவரை காப்பாற்ற முயன்றபோது அவரையும் விஷவாயு தாக்கியதால் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், கிளீனர் திராவிட கதிரவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கவலைக்கிடம்

டிரைவர் முத்துகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான திராவிட கதிரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்