செய்திகள்

நடிகை ஹேமமாலினி, ஜெயபிரதா உள்ளிட்ட 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்

நடிகை ஹேமமாலினி, ஜெயபிரதா உள்ளிட்ட 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரிய வரும்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

542 தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 7 ஆயிரத்து 928 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 724 வேட்பாளர்கள்தான். அதாவது பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தை விட குறைவு.

தேசிய கட்சிகளில் காங்கிரஸ் கட்சிதான் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. இரண்டாம் இடத்தில் பா.ஜனதா கட்சி உள்ளது. அந்தக் கட்சி 53 வேட்பாளர்களை களம் இறக்கியது.

பிற தேசிய கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 24, திரிணாமுல் காங்கிரஸ் 23, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 10, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4 வேட்பாளர்களையும் நிறுத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு பெண் வேட்பாளரை போட்டியிட செய்தது.

அரசியல் பிரபலங்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி (ரேபரேலி), நடிகை ஹேமமாலினி (பா.ஜனதா- மதுரா), நடிகை ஜெயபிரதா (பா.ஜனதா-ராம்பூர்), தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே (பாராமதி), தெலுங்கானா ராஷ்டிர சமிதி மூத்த தலைவர் கவிதா (நிஜாமாபாத்) உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்த தேர்தலில் 222 பெண்கள் சுயேச்சையாக போட்டியிட்டது கவனிக்கத்தக்கது.

100 பெண் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில் 78 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.

தேசிய கட்சிகளில் பாரதீய ஜனதாவில் 13, காங்கிரசில் 10 பெண் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.

பாரதீய ஜனதா கட்சி பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22 கோடியே 9 லட்சம். காங்கிரஸ் கட்சி பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.18 கோடியே 84 லட்சம்.

பெண் வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர் நடிகை ஹேமமாலினி. இவரது சொத்து மதிப்பு ரூ.250 கோடி. இவருக்கு அடுத்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் ராஜம்பேட்டை தொகுதி வேட்பாளர் சத்யபிரபா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.220 கோடி. 3-வது இடத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சி வேட்பாளர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.217 கோடி.

531 வேட்பாளர்களின் வயது 25-50 என்ற அளவில் உள்ளது. ஒரே ஒரு வேட்பாளர் வயது 80-ஐ கடந்து விட்டது.

இந்த வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம், இன்று அவரவர் தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை முடியும்போது தெரிய வரும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்