தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில், துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் கூட்டம் நேற்று தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தலைமை தாங்கினார். தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி, வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன், மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நாட்டுப்படகு மற்றும் கட்டுமரம் மீனவர்கள் சங்க தலைவர் கயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் பேசும் போது கூறியதாவது:-
மக்களுக்காக, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அஞ்சலி செலுத்துவது, மாலை அணிவிப்பது எல்லாம் சுலபமான காரியம்தான். ஆனால் போராட்டத்தை நசுக்குவது என்ற எண்ணத்தோடு இருக்கிறவர்களிடம் போராடுவது தான் மிக மிக கடினமானது. நாட்டுக்காக, மக்களுக்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று நினைக்க கூடாது. அப்படி நினைத்து அடக்க நினைப்பது அநியாயம். இது போன்று அடக்கினால், காலப்போக்கில் போராட்டம் என்றாலே ஜனநாயக போராட்டமாக இருக்காது. வன்முறை போராட்டமாக தான் இருக்கும்.
போலீசார் நமது நண்பர்கள் தான். ஆனால் அவர்கள் பாவம், மந்திரிகள், சுயநலவாதிகளின் கையில் இருக்கிற ஆயுதமாகி உள்ளனர். இவர்கள் எல்லாம் மக்கள் நலம் காப்பவர்களாக, யாருக்கும் கட்டுப்பட்டவர்களாக இல்லாமல் சுயமாக சிந்திப்பவர்களாக, சுயமாக செயல்படுபவர்களாக அவர்களை நாம் மாற்ற வேண்டும். உயிர் போனால் வராது. அவர்களை இழந்த குடும்பம் எவ்வளவு துயரங்களை சந்தித்து வருகிறது. அவர்களுக்கு நிதி உதவி செய்வது, ஆறுதல் சொல்வது எல்லாம் சுலபம்தான்.
துப்பாக்கி சூட்டில் ஊனமுற்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் அரசு பணி வழங்க வேண்டும். அதையாவது தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும். அவர்கள் தகுதிக்கு ஏற்றார் போன்று அரசு பணி வழங்குவது மிக முக்கியமான ஒன்று. அதே நேரத்தில் அரசாங்கம் அன்னிய நிறுவனங்களின் கைப்பாவையாக இருந்து செயல்படும் நிலை மாற வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் ஓட்டு போட்டு உள்ளோம். நிலைமை மாறும் என்று தான் ஓட்டு போட்டோம். ஆனால் இந்த நிலைமை மாறவில்லை. எவ்வளவு காலம்தான் நாம் அடிமைகளாக இருப்பது?. இந்த தேர்தலிலும் நாம் வாக்களித்துள்ளோம்.
இந்தியா உலகத்தில் பெரிய ஜனநாயக நாடு என்பதை நாம் வாக்களித்ததன் மூலம் நிலைநாட்டி உள்ளோம். ஆனால் யார் ஆட்சி அமைத்தாலும் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்களா?, மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்களா? நமது உரிமைகளை காப்பாற்றுவார்களா? என்றால் நிச்சயமாக எதையும் செய்ய போவது இல்லை. நாம் சுயமாக சிந்திக்க வேண்டும். அன்னிய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது. ஆட்சியாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு கொண்டு வரலாம். அதற்கு தண்ணீர், மின்சாரம், இடம் என அனைத்தும் கொடுக்கலாம். ஆனால் அங்கு இந்தியன் என்ற உணர்வு, தமிழன் என்ற உணர்வு உள்ளவர்கள் பணியாற்றகூடாது. அப்படியென்றால் நமக்கு எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும். நாம் எல்லோரும் நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்த தொடங்கினால் அதன் உற்பத்தி அதிகரிக்கும். அதனால் நமக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நம்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் தான் இங்கு விற்பனை செய்யப்பட வேண்டும். இப்படி செய்தால் தான் அன்னிய மோகம் தீரும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாநில வணிகர் பேரவை பொதுச்செயலாளர் செல்வம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.பி.சி.வீ.சண்முகம், ஏ.ஐ.சி.சி.டி.யு. ஓட்டுனர் யூனியன் தலைவர் சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.