லண்டன்,
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் மற்ற உருமாறிய வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் இதுவரை 63 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள இந்த சூழலில், இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் தீவிரம் காட்டி வருவதால், அந்நாட்டில் எச்சரிக்கை அளவை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்
ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு லண்டனில் "தனியான விகிதத்தில்" பரவியுள்ளது. இந்த தொற்று தற்போது சுமார் 40% நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. இரட்டை தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், பூஸ்டர் டோஸ் தடுப்புசிகளை எடுக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் பரவலை அடுத்து இங்கிலாந்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ஒமைக்ரான் பேரலை வீசும். அதை தடுப்பதற்காக ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பு தராது என்று தெரிவித்துள்ளார்.