லண்டன்,
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி இங்கிலாந்தின் வின்ஸ்டன் அரண்மனையில் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் இன்று இந்த தம்பதியினர் தங்களது 3வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது மேகன் மார்க்கெல் மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து தற்போது இவர்கள் இருவரும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மாண்டாசிட்டோ பகுதியில் வசித்து வருகின்றனர்.
தங்களது 3வது திருமண நாளை ஹாரியும், மேகனும் தங்கள் இரண்டு வயது மகன் ஆர்ச்சியுடன் வீட்டிலேயே எளிமையாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் இங்கிலாந்து அரசு குடும்பத்தின் பாரம்பரியத்தின்படி தம்பதிகள் தங்களுக்குள் பரிசு பொருட்களை வழங்கிக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் இணைந்து ஆர்ச்வில் பவுண்டேஷன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று தங்களது 3வது திருமண நாளை முன்னிட்டு இந்த தொண்டு நிறுவனம் மூலம் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி கொரோனா தொற்றின் 2வது அலையால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில், தங்களது ஆர்ச்வில் பவுண்டேஷன் மற்றும் வேர்ல்ட் செண்ட்ரல் கிட்சன் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு சமூக நிவாரண மையத்தை துவங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவிற்கு தேவையான நீண்ட கால உதவிகளை சரியான முறையில் வழங்க முடியும் என்று கருதுவதாக அவர்களது தொண்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.