உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயுடன் மோடி சந்திப்பு

காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் லண்டன் சென்றார்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்தித்து இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது குறித்து பிரதமர் விரிவாக பேசினார்.

25-வது காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு லண்டன் நகரில் நடக்கிறது. இதில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இங்கிலாந்து ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 4 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றார்.

முன்னதாக நேற்று முன்தினம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்த நார்டிக் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு அன்றிரவே மோடி லண்டனுக்கு பயணமானார்.

அவரை லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் கைகுலுக்கி வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மோடி, லண்டன் டவுனிங் தெருவில் வசிக்கும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு காரில் சென்றார். மோடியை காண்பதற்காக சாலையின் இருபுறமும் இந்தியர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மோடி தனது வீட்டுக்கு வந்தபோது, வாசலுக்கே வந்து தெரசா மே, கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் மோடிக்கு அவர் சிறப்பு விருந்தும் அளித்தார்.

இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும், எல்லை தாண்டிய பயங்கரவாதம், விசா மற்றும் 2014-ம் ஆண்டு இரு நாடுகளும் புதுப்பிக்கவேண்டிய சட்டவிரோதமாக குடியேறிவர்கள் குறித்த ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நம்மால் இந்தியா, இங்கிலாந்து நாட்டு மக்களுக்காக ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்று தெரசா மே குறிப்பிட்டார்.

மோடி கூறுகையில், இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளிடையே புதிய சக்தி சேர்க்கப்பட்டு இருக்கிறது என நம்புகிறேன். சூரிய ஒளி கூட்டமைப்பு நாடுகளில் ஒரு அங்கமாக இங்கிலாந்தும் திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இது பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல, நமது எதிர்கால தலைமுறையினருக்கான பொறுப்புணர்வும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகிவிட்டாலும் கூட நமது இரு நாடுகளின் வர்த்தக உறவின் முக்கியத்துவம் நீர்த்துப்போகவில்லை என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியும், தெரசா மேவும் சந்தித்து பேசிய பிறகு இருவர் சார்பிலும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ராணுவம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கல்வி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பங்களிப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது என உறுதியளிக்கப்பட்டது.

* அனைத்து வித பயங்கரவாத தாக்குதல் மற்றும் அது தொடர்பான சம்பவங்களுக்கும் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதம் எந்த வகையிலும், மதம், இனம், மொழி, தேசியம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருக்க கூடாது, பயங்கரவாதத்தை எந்த நாடும் ஆதரிக்க கூடாது, அவர்களுக்கு புகலிடம், நிதி திரட்ட அனுமதிக்க கூடாது, இணைய வழி பயங்கரவாதத்தை தடுக்கவேண்டும் என இரு நாடுகள் சார்பிலும் வற்புறுத்தப்பட்டது.

* உலக அளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஹக்கானி நெட்வொர்க், அல்கொய்தா, ஐ.எஸ். இயக்கம் மற்றும் இவை சார்ந்த குழுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன.

* சிரியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலை இந்தியாவும், இங்கிலாந்தும் வன்மையாக கண்டிக்கின்றன.

* இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெறவும் கடல்சார் பாதுகாப்பிற்கும் இரு நாடுகளும் முன்னுரிமை அளிக்கின்றன. இதேபோல் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பின்னர், லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ள 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய தத்துவஞானி பசவேஸ்வராவின் மார்பளவு சிலைக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அங்கிருந்து கென்சிங்டன் பகுதியில் உள்ள லண்டன் அருங்காட்சியகத்துக்கு மோடி சென்றார். அங்கு மோடியை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வரவேற்றார். மேலும் சார்லஸ் ஏற்பாடு செய்துள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

இங்கு யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் பெருமையை பறைசாற்றும் அறிவியல்பூர்வ புதிய அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பணியாற்றும் இந்திய வம்சாவளி டாக்டர்களையும் மோடி சந்தித்து சிறிது நேரம் அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதைத்தொடர்ந்து மாலையில் லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 2 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பானது.

அதைத்தொடர்ந்து லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி எலிசபெத்தை தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

முன்னதாக காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் இடம் பெற்றுள்ள சிறிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காண்பதற்காக 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(ரூ.32.50 கோடி) நிதி உதவி அளிப்பதற்கான நாடுகளின் வரிசையில் இலங்கை, மால்டா, மொரீஷியஸ் ஆகியவற்றுடன் இந்தியாவும் இணைந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்