மாஸ்கோ,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு கூடுகிறது .
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ .நா. பொதுசபையின் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் இணைந்து ரஷியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில், 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தன. ஆனால், சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.
இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுசபையின் 11வது சிறப்புக்கூட்டம் இன்று இரவு கூடுகிறது. இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி லாவ்ரோவ், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.கூட்டத்திற்கு செல்லும் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் வான்வெளியை ரஷிய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி கலந்து கொள்ள மாட்டார் என ரஷியா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.