நாக்பூர்,
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஷிகர் தவான், புவனேஷ்வர்குமார் மற்றும் இடது இடுப்பு பகுதியில் லேசான வலியால் அவதிப்படும் முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக முரளிவிஜய், ரோகித் சர்மா, இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டனர். எதிர்பார்க்கப்பட்ட தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சன்டிமால் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் வரிசையாய் பெவிலியன் திரும்பினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்ட நேர இறுதியில் லோகேஷ் ராகுலின் (7 ரன்) விக்கெட்டை இழந்து 11 ரன் எடுத்துள்ளது. முரளிவிஜய் (2 ரன், 28 பந்து), புஜாரா (2 ரன், 7 பந்து) களத்தில் இருந்தனர். 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.இதில் விஜய் -புஜாரா ஜோடி களத்தில் நங்கூரம் போல் நிலைத்து நின்று நிதானமாக ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராடினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய விஜயும் புஜராவும் அடுத்தடுத்து சதம் அடித்தனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முரளி விஜய் அடிக்கும் 10 சதம் இதுவாகும். புஜாரா அடித்த 14 வது சதம் இதுவாகும்.
128 ரன்கள் அடித்த விஜய் ஹெராத் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, புஜராவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலியும் அரை சதம் அடித்தார். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 121 ரன்களுடனும் விராட் கோலி 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியை விட இந்திய அணி 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.