சென்னை,
32-வது மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் குளத்தில் இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று குரூப்2 சிறுவர்களுக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் சென்னை ஆர்கா கிளப்பை சேர்ந்த சர்வபள்ளி கிருஷ்ண பிரணவ் 9 நிமிடம் 18.77 வினாடிகளில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதே போல் 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்திலும் அவரே முதலாவதாக நீந்தி வந்தார். குரூப்1 சிறுமியருக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் வேல்ஸ் வீராங்கனை ரக்ஷனா (1 நிமிடம் 15.80 வினாடி) முதலிடத்தை பிடித்தார். 200 மீட்டர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் ஜெயா ஸ்ருதி (டர்டில்ஸ் அணி) 3 நிமிடம் 13.93 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். குரூப்3 சிறுமியருக்கான 100 மீட்டர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் வேவ்ஸ் வீராங்கனை தயநிதாவும் (1 நிமிடம் 29.28 வினாடி), இதன் குரூப்1-ல் ஜெயா ஸ்ருதியும் (1 நிமிடம் 30.77 வினாடி) வெற்றி பெற்றனர்.
2 நாள் போட்டி முடிவில் ஆண்கள் பிரிவில் நெல்லை பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியும் (328 புள்ளி), பெண்கள் பிரிவில் வேல்ஸ் அணியும் (138 புள்ளி) சாம்பியன் கோப்பையை பெற்றன. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னையைச் சேர்ந்த எஸ்.டி.ஏ.டி. டால்பின் அணி 411 புள்ளிகளுடன் தட்டிச் சென்றது. பென்ஹனன், ரக்ஷனா, சர்வபள்ளி கிருஷ்ண பிரணவ், நிதிவோரா, சபரீஷ், ரோஷிணி, சாய் ஆதித்யா, பிரமிதி ஞானசேகரன் ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் தனிநபர் சாம்பியன்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க தலைவர் டாக்டர் சடையவேல் கைலாசம் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் செயலாளர் டி.சந்திரசேகரன், துணைத்தலைவர்கள் முகுந்தன், முனியாண்டி, பொருளாளர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.