ஆகாஷ் மரண வழக்கு: தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

மானாமதுரையில் ஆகாஷ் மரண வழக்கில், "எனது காலை போலீசார் அடித்து உடைத்துவிட்டு, கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு என்னை மிரட்டினர்" என்று அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் மரண வழக்கு: தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, ஆகாஷ் டெல்சன் என்ற வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கால்முறிவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் தாக்கியதில் தான் ஆகாஷ் காயமடைந்ததாக கூறி, அவரது உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகாஷின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆகாஷ் காவல் மரணம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆகாஷை போலீசார் காவலில் எடுப்பதற்கு முன்பாக அவர் கொடுத்த வாக்குமூலத்தின் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வாக்குமூலத்தில் ஆகாஷ், "சீருடையில் இல்லாத 10 போலீசார் வெள்ளை துணியால் கண்ணை கட்டி என்னை மட்டும் வேறு காரில் ஏற்றி தனியாக அழைத்து சென்றனர். அங்கு என்னை உட்கார வைத்து எனது கெரண்ட காலிற்கு கீழேயும், முட்டிக்கு கீழேயும் இரண்டு கற்களை வைத்தார்கள். ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியால் எனது வலது காலில் ஓங்கி ஒரு முறை அடித்தார்கள். அடித்தவுடன் எலும்பு முறிந்து ரத்தம் வந்தது. வலியில் துடித்தேன். கண்ணை கட்டி இருந்ததால், என்னை யார் அடித்தார்கள் என்று எனக்கு தெரியாது. பின்னர் கண் கட்டை அவிழ்த்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். மருத்துவரிடம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு என்னை மிரட்டினர்" என்று தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆகாஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று சிவகங்கை மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com