தலையங்கம்

காவிய தலைவருக்கு நூற்றாண்டு விழா !


காவிய தலைவருக்கு நூற்றாண்டு விழா !
2 Jun 2023 7:55 PM GMT

63 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’ திரைப்படத்தில், எம்.ஜி.ஆர். சாரட் வண்டியில் ஏறி, “அச்சம் என்பது மடமையடா..” என்ற பாடலை பாடிக்கொண்டு வருவதுபோல, ஒரு காட்சி வரும்.

63 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'மன்னாதி மன்னன்' திரைப்படத்தில், எம்.ஜி.ஆர். சாரட் வண்டியில் ஏறி, "அச்சம் என்பது மடமையடா.." என்ற பாடலை பாடிக்கொண்டு வருவதுபோல, ஒரு காட்சி வரும். கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலில் கடைசியாக, "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?. மாபெரும் வீரர், மானம் காப்போர், சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்" என்று வரிகள் வரும். அந்த பாடலுக்கேற்ப மக்களின் மனதில் நிற்பவரும், சரித்திரம் தன்னிலே நிற்பவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, இனி எத்தனை நூற்றாண்டுகளானாலும் அவரை தமிழகம் மறக்காது. 94 வயது வரை வாழ்ந்த அவர், தன் வாழ்நாள் முழுவதும், தமிழே தன் உயிராக, தமிழின நலமே தன் உணர்வாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியே தன்னுடைய வாழ்நாள் செயல் திட்டமாக கொண்டு வாழ்ந்தவர்.

அவருடைய கொள்கை பிடிப்புக்கு, மறைந்த அண்ணா ஒருமுறை கூறியதே சான்றாகும். "தண்டவாளத்தில் தலைவைத்து படு என்றாலும், மந்திரி பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாக கருதுபவன் என் தம்பி கருணாநிதி" என்றார், அண்ணா. அதுபோல தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, தஞ்சாவூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது, "வரலாற்றின் முற்பகுதியை நான் எழுதிவிட்டேன். பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார். அவர் அன்று சொன்னதுபோலவே, அண்ணா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் பொறுப்பையேற்ற கலைஞர் கருணாநிதி, 5 முறை முதல்-அமைச்சர் பொறுப்பை மட்டுமல்லாமல், கட்சி தலைமை பொறுப்பையும் ஏற்று திறம்பட, சரித்திரம் மறக்காத அளவுக்கு சாதனை படைத்துவிட்டு சென்றுவிட்டார்.

தான் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், ஒரு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வரலாற்றில், 75 ஆண்டுகள் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு இருக்கிறது. தனது 14 வயதிலேயே திருவாரூர் வீதிகளில் தோளில் தமிழ்க்கொடியை ஏந்திக்கொண்டு, "ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள், நீ தேடிவந்த கோழை நாடு இதுவல்லவே.." என்று தன் தமிழ்ப்பற்றை பறை சாற்றினார். அப்போதே, பொதுவாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த கலைஞர் 80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எந்த பிரச்சினையிலும், "கலைஞரின் கருத்து என்ன?" என்று அனைத்து அரசியல் கட்சிக்காரர்களையும் கேட்க வைத்தவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில், அவரது பொறுப்பு அளப்பரியது. முதல்-அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம் என்றாலும், தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றும் வகையில், மகளிருக்கு சொத்தில் சம உரிமை சட்டம், அரசு வேலை வாய்ப்பில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்து, தாய்க்குலத்தின் ஏற்றத்துக்கு ஏணியாக இருந்தவர். அனைத்து தரப்பு தமிழ் மக்களின் உயர்வுக்கும் வழிவகுத்து, தான் தடம் பதித்த எல்லா துறைகளிலும் முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி ஒரு காவிய தலைவர், அவரை காலம் மறக்காது, தமிழ்கூறும் நல்லுலகும் மறக்காது.