மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றம்

பிளஸ்2 மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

மதுரை,

பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

பிளஸ்-2 மாணவி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், விடுதி அறைகளை சுத்தம் செய்யும்படி அந்த மாணவியை வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரி (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அந்த மாணவி, தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதாக பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

இதையடுத்து மாணவி சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர், இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த மாணவி சாவு குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. அல்லது வேறு அமைப்பின் விசாரணைக்கு மாற்றும்படி மாணவியின் தந்தை முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.

முதற்கட்டமாக, இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத வகையில் விசாரணையை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார். பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்கி, அடக்கம் செய்யுமாறும் உத்தரவிட்டார்.

மேலும் முருகானந்தம், அவரது மனைவி ஆகியோரிடம் மாஜிஸ்திரேட்டு பெற்ற ரகசிய வாக்குமூலத்தின் நகல் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. மாணவி பேசியதை வீடியோ எடுத்த முத்துவேல் என்பவரும் விசாரணை அதிகாரியிடம் ஆஜராகி, செல்போன் உள்ளிட்ட சாதனங்களை ஒப்படைக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்கும்படி இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

பள்ளி நிர்வாகம் சந்தேகம்

இந்த மனுக்களின் மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கடந்த 28-ந்தேதி தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

இந்தநிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று பிறப்பித்தார். அதில் கூறியிருந்ததாவது:-

மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என அமைச்சர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆனால் மாணவி பேசிய வீடியோ, மேற்கூறியவர்களின் கருத்துகளுக்கு மாறாக உள்ளது.

அமைதி காத்த போலீஸ் அதிகாரி

மாணவி படித்த பள்ளி உள்ள இடம், மைக்கேல்பட்டி என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த இடத்தின் அசல் பெயர் இதுவாக இருந்திருக்காது. மதமாற்ற குற்றச்சாட்டு உண்மையாகவோ, பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் இந்த விவகாரம் குறித்து போலீசார் முழுமையான விசாரணையை நிராகரித்துள்ளனர். அந்த மாணவி இறக்கும் வரை மதமாற்ற குற்றச்சாட்டு வெளியில் வரவில்லை. இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரிப்பதற்கு பதிலாக, இந்த விஷயத்தில் அமைதி காக்கவே விரும்பியுள்ளார்.

மாணவி பேசிய வீடியோ உண்மையானது என்பதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிந்திருக்கிறார். இதனால் வீடியோ எடுத்த நபரை மிரட்டியுள்ளார்.

அதன்காரணமாக மனுதாரர் உள்ளூர் போலீசார் மீது நம்பகத்தன்மையின்றி, இந்த கோர்ட்டை நாடியுள்ளார்.

மாணவியின் கனவு

பள்ளித்தாளாளர் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் விடுதி காப்பாளர் சகாயமேரி மட்டுமே கைதாகி உள்ளதால், உள்ளூர் போலீசார் விசாரித்தால் நீதி கிடைக்காது எனவும் மனுதாரர் கருதுகிறார்.

அந்த மாணவி, 10-ம் வகுப்பில் 500-க்கு 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். பிளஸ்-2 வகுப்பிலும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் அவருக்கு சில கெடுபிடிகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளார். மாநில அமைச்சரே, இந்த விவகாரத்தில் ஒரு முடிவான நிலையில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை உள்ளூர் போலீசார் தொடரக்கூடாது.

சி.பி.ஐ.க்கு மாற்றம்

எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுகிறேன். அவர்கள் இந்த வழக்கில் உண்மைத்தன்மையை கொண்டு வருவார்கள் என நம்புகிறேன். மேலும் இந்த வழக்கில் கைதான சகாயமேரியின் ஜாமீன் மனுவை உரிய ஆவணங்களின் அடிப்படையில் கீழ்கோர்ட்டு பரிசீலித்து முடிவு எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக உயரிய மதிப்பளித்தவர் பிரதமர் மோடி: மத்திய மந்திரி சோனோவால்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

மார்க்கெட் நடுவே கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்... உள்ளே நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் - பீகாரில் பரபரப்பு

கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய புதுப்பெண்: கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி புதுச்சேரி வருகை