சென்னை,
செங்கல்பட்டு தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து தெரியாமல் சிறுமி பள்ளிக்கு சென்று வந்த நிலையில், திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனையில் சிறுமி 10 வார கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்களுடன் சேர்ந்து வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன குடும்பத்தினர் சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதால் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி காரணமாகவே சிறுமியின் உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட தனியார் மருத்துவமனையில் சிறுமி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டபோது தான் அவர் கர்ப்பமானது தெரிய வந்துள்ளது. இது பற்றி உடனடியாக தனியார் மருத்துவமனை நிர்வாகம், போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தால் அவர்கள் முறைப்படி விசாரணை நடத்தி இருப்பார்கள். சிறுமிக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு கிடைத்திருக்கும்.
கடந்த 4-ந்தேதியே சிறுமி கர்ப்பமானது தெரிய வந்த நிலையில், அதுபற்றி போலீசாருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதன்பிறகு கடந்த 17-ந்தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட பிறகே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.