பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி கடும் தாக்கு


பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி கடும் தாக்கு
x
தினத்தந்தி 22 April 2024 7:33 AM GMT (Updated: 22 April 2024 9:47 AM GMT)

நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வும் கடுமையாக இருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி வெறுப்பு மொழியில் பேசுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அவர் மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

செல்வங்களை மறுபகிர்வு கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டியிருந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து மனம் உடைந்துபோயிருக்கும் மோடி, பொய்களையும், மோசமான பேச்சுகளையும் பேசி, மக்களை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப முயல்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

"நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வும் கடுமையாக இருக்கிறது. ஆனால் அனைத்தும் நன்றாக இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். அவர், பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப பல்வேறு உக்திகளை தெரிந்துவைத்திருக்கிறார். ஆனால், அவரது பொய்களுக்கான முடிவு நெருங்கிவிட்டது." இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,

"பிரதமர் பல விஷயங்களில் வெறுப்பு மொழியில் பேசுகிறார். ஒரு எளிய கேள்விக்கும் அவர் பதிலளிக்க வேண்டும் - 1951 முதல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்களின் உண்மையான தரவுகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் இது வரை கணக்கெடுப்பு செய்யவில்லை. இது அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிக்கும் சதி என்று ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் விமர்சனம் செய்திருந்தார். பிரதமர் மோடி கூறுகையில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை இஸ்லாமிய மக்களுக்கு மறுபங்கீடு செய்துவிடுவார்கள் என்றார்.

மேலும், சிறுபான்மையினருக்கு தான் நாட்டின் வளங்கள் முதலில் வழங்கப்பட வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்தையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடும்ப ஆட்சி, ஊழல் ஆகிய 'கறையான்களை' பரப்பி, நாட்டை வெறுமையாக்கியது காங்கிரஸ். இன்று ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் மீது கடுங்கோபத்தில் உள்ளது. அக்கட்சி தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட்டு வருகிறது. காங்கிரசின் மிக மோசமான நிலைமைக்கு அக்கட்சியே பொறுப்பு. ஒரு காலத்தில் 400 தொகுதிகளில் வென்ற அக்கட்சியால், இப்போது 300 தொகுதிகளில்கூட சுயமாகப் போட்டியிட முடியவில்லை. வேட்பாளர்களே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story