அனிமேஷன் தொழில் நுட்பத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ திரைப்படம்


அனிமேஷன் தொழில் நுட்பத்தில்  எம்.ஜி.ஆர். நடிக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ திரைப்படம்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:45 PM GMT (Updated: 2018-01-16T02:17:51+05:30)

அனிமேஷன் தொழில் நுட்பத்தில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

சென்னை,

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்றவர். அவர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல, ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை தயாரித்து நடிக்க திட்டமிட்டார். ஆனால், அவருடைய அந்த கனவு நனவாகவில்லை.

எம்.ஜி.ஆர். திட்டமிட்டு நடக்காத அந்த படத்தை, தற்போது வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகனுமான ஐசரி கணேஷ் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர்.தான் நடிக்கிறார். எப்படியெனில், அமெரிக்காவில் அனிமேஷன் தொழில் நுட்பத்தின் மூலம் எம்.ஜி.ஆரையே நடிக்க வைப்பதுபோல, இந்த படம் தயாரிக்கப்பட இருக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகி யார்? என்பது குறித்து அடுத்த ஒருமாதத்தில் ஐசரி கணேஷ் அறிவிக்க இருக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் ஐசரி கணேஷின் தகப்பனாரும், எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவருமான ஐசரி வேலன் நடிப்பது மிகவும் சிறப்புக்குரியது.

அனிமேஷன் படத்தின் கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் பொறுப்பை எம்.அருள்மூர்த்தி ஏற்றுக்கொண்டிருக்கிறார். கவிஞர் வைரமுத்து திரைப்பட பாடல்கள் எழுதுகிறார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளை ராக்கி ராஜேஷ் வடிவமைக்கிறார். நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் நடனக் காட்சிகளை அமைக்கிறார்.

தொடக்கவிழா

இந்த படத்தின் தொடக்கவிழா நாளை (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியான பழைய சத்யா ஸ்டூடியோவில் நடக்கிறது.

இதுகுறித்து ஐசரி கணேஷ், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறும்போது, ‘என் தந்தை ஐசரி வேலன் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். என் தந்தையும், எம்.ஜி.ஆரைத்தான் தனக்கு எல்லாம் என்று நினைத்து வாழ்ந்தவர். அப்படிப்பட்ட புரட்சித்தலைவர் கனவு நனவாகாமல் போய்விடக்கூடாது என்ற வகையில், அதை நனவாக்கும் வகையில் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தை நான் தயாரிக்கிறேன். அனிமேஷன் தொழில் நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது. இது தமிழ் திரைப்பட வரலாற்றில் யாரும் தயாரிக்காத ஒரு முயற்சியாகும். இந்த படம் நிச்சயமாக பார்ப்பவர்களை பிரமிக்கச்செய்யும். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற எனது நிறுவனமும், நடிகர் பிரபுதேவா ஸ்டூடியோவும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளான நாளை இந்த படத்தின் தொடக்கவிழா நடக்கிறது. 102-வது பிறந்த நாளான 17.1.2019 அன்று இந்த படம் உலகம் முழுவதிலும் வெளியிடப்படும். தொடக்க விழா பூஜைக்கு திரைப்பட உலக பிரமுகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மேற்கண்டவாறு ஐசரி கணேஷ் கூறினார். 

Next Story