சினிமா செய்திகள்

கண்ணீரில் தத்தளிக்கிறது இந்திப்பட உலகம் + "||" + Tears in tears. World in Hindi Cinema

கண்ணீரில் தத்தளிக்கிறது இந்திப்பட உலகம்

கண்ணீரில் தத்தளிக்கிறது இந்திப்பட உலகம்
ஸ்ரீதேவியின் மறைவையொட்டி பாலிவுட் பட முன்னணி நட்சத்திரங்கள் இரங்கல். #RIPSridevi #Sridevi
நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், மும்பை அந்தேரி லோகந்த்வாலா வளாகத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன், அவருடன் எடுத்த புகைப்படத்தை கையில் ஏந்திக்கொண்டு ஏராளமான ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் கூடி இருந்தனர்.


தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு சென்று கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதேவியின் மரணத்தால், இந்திப்பட உலகம் கண்ணீரில் தத்தளிக்கிறது. அவரது திடீர் மறைவையொட்டி பாலிவுட் பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

அமிதாப்பச்சன்

ஏன் என்றே தெரியவில்லை, ஒரு வினோதமான பதற்றமாக உள்ளது. (ஸ்ரீதேவி மரணம் குறித்த தகவல் வெளியாகும் முன்பே இதை அமிதாப் வெளியிட்டு உள்ளார். ஸ்ரீதேவியின் மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா அல்லது முதல் தகவல் அமிதாப்புக்கு வந்ததா என தெரியவில்லை என்று ஊடகங்கள் சொல்கின்றன.)

பிரியங்கா சோப்ரா

என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவியை நேசித்த ஒவ்வொருவருக்கும் எனது அனுதாபங்கள். இந்த நாள் ஒரு கருப்பு நாள். அவரது ஆன்மா அமைதி பெறுவதாக.

அமீர்கான்

ஸ்ரீதேவியின் அகால மரணத்தால் மிகுந்த துயரத்துக்கும், வேதனைக்கும் ஆளாகி உள்ளேன். நான் எப்போதுமே அவரது மிகப்பெரிய ரசிகன். அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் அனுதாபங்கள். அவரது மறைவால் ஏற்பட்டு உள்ள துக்கத்தில் லட்சோப லட்சம் ரசிகர்களில் என்னையும் இணைத்து கொள்கிறேன்.

மாதுரி தீட்சித்

ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்ற துயரமான செய்தியை கேட்பதற்குத்தான் இந்த காலையில் கண்விழித்தேன் போலும். மிகவும் திறமை வாய்ந்த ஒரு கலைஞரை உலகம் இழந்து விட்டது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

டைரக்டர் சேகர் கபூர்

ஸ்ரீதேவி மறைந்து விட்டார். ஒரு சகாப்தமே முடிந்து விட்டது போல் இருக்கிறது. ஒரு அழகான கதை முடிந்து விட்டது. அற்புதமான அன்பையும் நினைவுகளையும், நம்ப முடியாத துக்கத்தையும் நம்மிடையே விட்டு விட்டு ஒரு அற்புதமான ஆன்மா விடைபெற்றுச் சென்று விட்டது.

நடிகை ஹேமமாலினி எம்.பி.

ஸ்ரீதேவியின் திடீர் மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் எத்தனை ஆளுமை நிறைந்தவர் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அற்புதமான நடிகை. அவர் விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது குடும்பத்தாருக்காக பிரார்த்திக்கிறேன்.

டைரக்டர் சுபாஷ் கய்

ஸ்ரீதேவி அனைத்து மொழிகளிலும் முடிசூட்டா ராணியாக பவனி வந்தார். அவரது இழப்பு, எனக்கு மிகுந்த துயரத்தை தந்து உள்ளது. அவர் சிறந்த நடிகைகளில் ஒருவர் அல்ல; அவர்தான் சிறந்த நடிகை. ஒரு நடிகையாக கண்ணியத்தையும், நேர்மையையும் கடைப்பிடித்து வந்தார்.

நடிகர் அனுபம் கெர்

ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்று எண்ணி இறந்த காலத்தில் என்னால் அவரைப் பற்றி பேச முடியவில்லை. என்னால் இப்போது நிறைய பேச முடியாது.

நடிகர் அக்‌ஷய் குமார்

ஸ்ரீதேவியின் அகாலமான மரணத்தால் வார்த்தைக்கு வராத வேதனையும், அதிர்ச்சியும் அடைந்து உள்ளேன். அனேகருக்கு அவர் கனவு தேவதை. நீண்ட காலத்துக்கு முன் அவருடன் இணைந்து நடிக்கிற பாக்கியம் எனக்கு கிடைத்தது. தொடர்ந்து பல்லாண்டு காலம் அவரது நடிப்பை பார்த்து வியந்து வந்து உள்ளேன். அவரது குடும்பத்தாருக்காக பிரார்த்திக்கிறேன். அவர்களோடு என் நினைவுகளை இணைத்துக்கொள்கிறேன்.

நடிகை கஜோல்

ஸ்ரீதேவியின் மறைவு செய்தியால் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அவரது சிரிப்பை, பேச்சை இன்னும் பார்க்கிறேன். அவர் மிகச்சிறந்த நடிகை. அவர் நடிப்பு பள்ளி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவரது இழப்பு, மிகப்பெரிய இழப்பு.

நடிகை மனிஷா கொய்ராலா

ஸ்ரீதேவியின் மரணம் குறித்த செய்தி, எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் ஒரு சேர தந்து உள்ளது. அவர் மறைய வேண்டிய வயது இல்லை. அத்தனை அழகான, திறமை வாய்ந்த நடிகை அவர். அவரது படங்கள் வருகிறபோது, மிகுந்த ஆவலுடன் காத்திருந்திருக்கிறேன்.

நடிகை சுஷ்மிதா சென்

மாரடைப்பால் நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு தள்ளிவிட்டது. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அவர்கள் தங்களது இரங்கல் செய்தியில் கூறி உள்ளனர்.