சினிமா செய்திகள்

கியூப் கட்டணத்தை எதிர்த்து பட அதிபர்கள் வேலை நிறுத்தம் + "||" + Cube Fee Movie Principals Strike

கியூப் கட்டணத்தை எதிர்த்து பட அதிபர்கள் வேலை நிறுத்தம்

கியூப் கட்டணத்தை எதிர்த்து பட அதிபர்கள் வேலை நிறுத்தம்
டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டணத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளன.
‘கியூப்’ உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் கட்டணத்தை எதிர்த்து நாளை மறுநாள் (1-ந் தேதி) முதல் புதிய படங்களை திரையிடுவது இல்லை என்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளன.

இந்த போராட்டத்தை கைவிட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், டிஜிட்டல் சேவை அமைப்புகளுக்கும் இடையே பல கட்டங்களாக சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் தீர்வு ஏற்படவில்லை. இதனால் வேலைநிறுத்தம் உறுதியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 1,100 திரையரங்குகள் உள்ளன. சினிமா டிஜிட்டல் மயமான பிறகு தியேட்டர்களில் இருந்த பிலிம் புரொஜக்டர்களை அகற்றி கியூப், யூஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட அமைப்புகள் டிஜிட்டல் புரொஜக்டர்களை நிறுவிவிட்டன.

இந்த அமைப்புகள் படங்களை திரையிடுவதற்கு கட்டணங்கள் நிர்ணயித்துள்ளன. புதிய படங்களை திரையிட ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை வாங்குவதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டணத்தை ரூ.10 ஆயிரமாக குறைக்கும்படி வற்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் உடன்படாததால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் புதிய படங்களை திரையிடுவது இல்லை என்று காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டம் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. இதனால் அடுத்த மாதம் திரைக்கு வர இருந்த பல புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் தவிப்பில் உள்ளனர்.

விஷால் நடித்துள்ள இரும்புத்திரை, தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ராந்த் நடித்துள்ள சுட்டுப்பிடிக்க உத்தரவு, விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கரு, விக்ரம்பிரபு நடித்துள்ள பக்கா ஆகிய படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வர இருந்தன. இந்த படங்கள் வேலைநிறுத்தம் காரணமாக தள்ளிப்போகின்றன. பவித்ரன் இயக்கிய தாராவி படம் ஸ்டிரைக் காரணமாக நாளை (28-ந் தேதி) திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பெங்களூருவில் மீண்டும் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.